இலங்கை வாகன சந்தையில் புதிய மாற்றம் ; வாகனங்களின் தேவை அதிகரிப்பு
இலங்கையின் வாகன சந்தையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளன.
இதன்படி நவம்பரில் 43,810 ஆக இருந்த வாகனப் பதிவுகள், டிசம்பரில் 48,525 ஆக உயர்ந்துள்ளன. மொத்தப் பதிவுகளில் 93.9% வாகனங்கள் 1,000 cc க்கும் குறைவான இயந்திர திறன் கொண்டவை அல்லது 100 kW க்கும் குறைவான மின்சார மோட்டார் திறன் கொண்ட சிறிய வாகனங்களாகும்.
அத்துடன் புதிய சிற்றூந்து பதிவு நவம்பரில் 781 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 1,150 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் BYD 408 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது. இதனையடுத்து BAW இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது டிசம்பரில் 247 E7 சிற்றூந்துகளைப் பதிவு செய்ததே இதற்குக் காரணம். மேலும் Toyota மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. Wigo சிற்றூந்துகளின் (185) பெரும் பங்களிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இதற்கிடையில், பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளின் பதிவு நவம்பரில் 2,910 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 3,857 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 95% ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
இந்த வாகனங்களுக்காக நிதி வசதி (Leasing) பெற்றவர்களின் விகிதம் 52.8% ஆகும். இதன்படி Suzuki 1,446 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் வேகன் ஆர் (Wagon R) 1,026, ஸ்பேசியா (Spacia) 227 மற்றும் ஆல்டோ (Alto) 115 பதிவு செய்துள்ளது. மேலும் டொயோட்டா (Toyota) 1,021 வாகனங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.