முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சாட்சி விசாரணைக்கு உத்தரவு
அநுராதபுரம், ஸ்ராவஸ்திபுர, திம்பிரிகடவல பகுதியில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்ட முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உதித் லியனகே மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி சாட்சியங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கில் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிய விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாறைகள் நிறைந்த காணியொன்றில் சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்டு புதையல் பொருட்களைப் பெற முயன்றமை மற்றும் அதற்குச் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு ஏற்கனவே தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முதலில் அநுராதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இவ்வழக்கில் ஏழாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்படும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உதித் லியனகேவும், ஒன்பதாவது சந்தேகநபரான எம். பத்மசிறி திசாநாயக்க என்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
இதன் காரணமாக, இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பில் சட்டத்தரணி நுவன் ரத்நாயக்கவும், முன்னாள் இராணுவ அதிகாரி சார்பில் சட்டத்தரணி பிரசாத் தர்மசேனவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
முறைப்பாட்டுத் தரப்பு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுடன், அநுராதபுரம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் ஆலோசனையின் பேரில் வழக்கு நடவடிக்கைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கருணானந்த வன்னிநாயக்க மற்றும் சார்ஜன்ட் இளங்கசிங்க ஆகியோரும் முன்னிலையாகினர்.