தென்னிலங்கையில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்
அம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆண் சடலங்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்காலை பொலிஸாரினால் இன்று (22) காலை குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்காலை, சீனிமோதரவில் ஒரு பழைய வீட்டை வாங்கிய ஒருவர் அதைச் சுற்றி ஒரு மதிலைக் கட்டி பல நாட்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வீட்டைப் புனரமைக்கும் பணிகளுக்கு 3 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு அவர்கள் மூவரும் இணைந்து வீட்டில் மது அருந்தியிருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தமது பிள்ளைகளுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் வந்து அந்த நபரை தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் தங்காலை பகுதியைச் சேர்ந்த விதாரந்தெனியவைச் சேர்ந்த 50 வயதுடைய துசித குமார என தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் மரணம் குறித்து அவரது பிள்ளைகள் தங்காலை பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் இன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வீட்டிற்குச் சென்றிருந்தனர். அந்த வீட்டின் ஒரு அறையில் மேலும் இரண்டு சடலங்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவர்கள் 21, மற்றும் 24 வயதுகளையுடையவர்கள் என கூறப்படுகின்றது. அவர்கள் அம்பலாந்தோட்டையில் உள்ள நோனாகம பகுதியைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களுக்கு அருகில் ஐஸ் ரக போதைப் பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.