பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் பரவும் போலி கடிதம்
சமூக வலைத்தளங்களில் பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் பரவிவரும் “Attn: The Alleged Victim” என்ற பெயரிலான கடிதம் போலியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணையத்தைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்ப்பது, வைத்திருப்பது, பரப்புவது, விநியோகிப்பது அல்லது தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் குடிமக்களைக் கைது செய்ய, 'சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைப் பணியகத்திற்கு' பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டதாகப் போலியாகக் கூறப்பட்டுள்ளது.
இது முற்றிலும் பொய்யானது மற்றும் வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்பும் ஒரு நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் அல்லது வேறு எந்தவொரு அதிகாரப்பூர்வ பிரிவும் இத்தகைய கடிதத்தை ஒருபோதும் வெளியிடவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இதுபோன்ற போலியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் துறை அறிவுறுத்தியுள்ளது.
போலியான ஆவணங்களைப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு, இலங்கை பொலிஸ்துறை ஊடகப் பிரிவு நேரடியாக வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டும் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.