அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்
காலி, அம்பலாங்கொடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இரு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான நீண்டகாலப் பகையின் விளைவாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நண்பர்களுடன் இணைந்து விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை, வீட்டின் முன்னாலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைந்திருந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், அவரை இலக்கு வைத்து சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 'கலபொட பொடி திமுது' என அழைக்கப்படும் ஹெட்டியாராச்சிகே திமுது சம்பத் (28 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் மீண்டும் இலங்கை திரும்பியபோது வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, அண்மையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கடந்த வருடம் இவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து, பல மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தாக்குதலுக்கு பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. அண்மையில் காலி சிறைச்சாலையில் இரு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையே மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே, 'கரந்தெனிய சுத்தாவின்' தரப்பினரால் இந்தத் திட்டமிட்ட படுகொலை அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் சேர்த்து, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.