ஊசி மூலம் எடை குறைப்பு ; ஆய்வாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
உடல் எடையைக் குறைப்பதற்காக தற்காலத்தில் பிரபலமாகி வரும் GLP-1 ரக ஊசிகளை பாவிப்பதை நிறுத்தினால், குறைந்த எடை மிக வேகமாக மீண்டும் அதிகரிக்கும் என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இந்த ஊசிகளை நிறுத்தும்போது, பசியைக் கட்டுப்படுத்தும் ஹோர்மோன்களின் செயல்பாடு குறைகின்றது. இதனால் நிறுத்தப்பட்ட சில வாரங்களிலேயே பசி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.

ஆய்வுகளின்படி, மருந்துகளை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் இழந்த எடையில் மூன்றில் இரண்டு பங்கு மீண்டும் அதிகரித்து விடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு இரண்டு வருடங்களுக்குள் பழைய எடையே மீண்டும் வந்துவிடுகிறது.
இந்த மருந்துகள் மூளைக்கு "வயிறு நிறைந்துவிட்டது" என்ற செய்தியைத் தொடர்ச்சியாக அனுப்புகின்றன. மருந்தை நிறுத்தியதும், இந்த உணர்வு இல்லாது போவதால் திடீரென அதிக பசி எடுக்கும். இது உணவுக் கட்டுப்பாட்டைப் பேணுவதில் பெரும் சவாலை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடை குறைவதால் உடலில் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் (குறைந்த இரத்த அழுத்தம், சீரான கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவு) மருந்தை நிறுத்தியதும் மீண்டும் பழைய நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடல் எடை மீண்டும் அதிகரிப்பது என்பது நபரின் மனவலிமை குறைபாடு அல்ல அது உடலின் உயிரியல் மாற்றம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மருந்துகள் உடலில் ஒரு தற்காலிக மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. மருந்தின் தாக்கம் நீங்கியதும் உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவே முயற்சிக்கும்.
எனவே இந்த ஊசிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அது வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டிய ஒன்றாக இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.