பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே நேர்ந்த சம்பவம் ; பரிதாபமாக உயிரிழந்த 18 வயது மாணவன்
உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பதுரலிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற இளைஞனே அகால மரணமடைந்துள்ளார். மதுகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்று வந்த அந்த மாணவன், அப்பகுதியின் வர்த்தக தம்பதிகளின் மூத்த மகனாவார்.
ஹசிது கல்வியில் மாத்திரமன்றி, விளையாட்டிலும் பாடசாலைப் புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்துள்ளார்.

கராத்தே போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் வென்றுள்ளார். பாடசாலை நீச்சல் போட்டிகளில் பலமுறை செம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
பாடசாலை கெடட் (Cadet) குழுவில் இணைந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பாடசாலைக்கு 'ஹெர்மன் லூஸ்' (Herman Loose) எனும் கௌரவப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த குழுவில் முக்கிய வீரராக இருந்துள்ளார்.
"மகனுக்கு உந்துருளிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பழைய உந்துருளிகளை வாங்கி, சில நாட்கள் ஓட்டிவிட்டு, நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்வார்.
பின்னர் அவற்றை மீண்டும் விற்றுவிடுவார். எதிர்காலத்தில் வாகன வியாபாரி ஆக வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது" என அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். கடந்த ஜனவரி 22 ஆம் திகதி தனது 18 ஆவது பிறந்தநாளை ஹசிது கொண்டாடியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் (23) இரவு நண்பர் ஒருவருடன் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பதுரலிய - களுக்கலை வீதியில் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹசிது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் விபத்துக்குள்ளான உந்துருளியை வாங்கி இரண்டு வாரங்கள் கூட நிறைவடையவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
திறமைமிக்க ஒரு மாணவனின் இந்த திடீர் மறைவு, பல மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.