தாக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்ததாகச் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
இதற்காக பொலிஸ் கான்ஸ்டபிளை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தம்மைத் தாக்கியதாகக் கூறி குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்திருந்தார்.
சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அவர், அண்மையில் எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான கஞ்சா சுற்றிவளைப்பை நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டி பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்த இடத்தில் இருந்தவர்களின் சாட்சியங்களைப் பெற்று இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தான் அத்தகைய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவிக்கின்றார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தான் பயணித்த மோட்டார் வாகனத்தை வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார குறிப்பிட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவி தெரிவிக்கையில், தமது கணவர் நேற்று இரவு தொலைபேசியில் அழைத்து இந்தத் தாக்குதல் குறித்துத் தெரிவித்ததாகக் கூறினார்.
அதன் பின்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தாம் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவி குறிப்பிட்டார்.