அநுராதபுரத்தில் கோர விபத்து ; தாயும் மகனும் பலி
விபத்தில் சிக்கிய ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, அநுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியின் கல்கமுவ, குருந்தன்குளம் பகுதியில் இன்று (21) பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்கமுவ வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி, அநுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிமோ பட்டா ரக லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
அத்துடன், விபத்துக்குள்ளான லொறிக்கு பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் இந்த லொறியுடன் மோதியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பெண்ணொருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர்கள் தாயும் மகனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னால் வந்த லொறியில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அத்துடன் லொறியின் பின்னால் மோதிய முச்சக்கரவண்டியிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் முன்பகுதிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.