த.வெ.க பேரணி சம்பவம் தொடர்பில் சிறீதரன் எம்.பி வெளியிட்டுள்ள தகவல்
தமிழகத்தின் கரூர் - வேலுச்சாமிபுரத்தில் நேற்று (27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தோர் "எமது தொப்புள்கொடி உறவுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதுமுக அரசியல் கட்சியான தவெகவினதும், நண்பர் விஜய் அவர்களினதும் அரசியல் பயணம், துயரமிகுந்த இந்த உயிர்த்தியாகங்களின் மீது உறுதி மிக்கதாகவும், மக்கள்மயப்பட்டதாகவும் வலுவாகக் கட்டமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களின் உரிமைக்காகத் தியாகம் செய்த தமிழக உறவுகளின் நினைவுகளைப் போற்றி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளையும், பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.