உலகக்கிண்ண போட்டி நடுவே பரபரப்பு ; அடையாள அட்டை மோசடி வெளிச்சம்
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (12) நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் போது, வேறொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லேகலை மைதானத்தில் இன்று இடம்பெறும் இலங்கை - ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, தற்காலிக ஊழியர் ஒருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானப் பணிகளுக்காக வந்திருந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மைதானத்தில் கூடாரங்களை அமைக்கும் பணிகளுக்காகத் தற்காலிக அடிப்படையில் இணைக்கப்பட்ட ஊழியர் எனத் தெரிவித்தே இவர் உள்ளே வந்ததாகவும், பின்னர் குறித்த நபர் பிற்பகல் 1.00 மணியளவில், மைதான அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் பணிக்காகக் கண்டியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
எனினும், அவர் இன்றைய தினம் வேலைக்குச் சமூகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி, திகன - ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.
கைதான இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காகப் பல்லேகலை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.