கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத பொருட்களுடன் இரு இந்தியர்கள் கைது
ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 23 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று (28) பிற்பகல் 6.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 'மென்செஸ்டர்' (Manchester) மற்றும் 'பிளாட்டினம்' (Platinum) வகையைச் சேர்ந்த 84,000 சிகரெட்டுகள் அடங்கிய 420 கார்ட்டூன்களும், 25 நவீன ரக 'அப்பிள்' (Apple) கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.