மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட 10 பேர் ; கரையோர காவற்படையினரின் அதிரடி நடவடிக்கை!
இலங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த 10 சுற்றுலாப் பயணிகளை இலங்கை கரையோர காவற்படையினர் (SLCG) பத்திரமாக மீட்டுள்ளனர்.
டிசம்பர் 24 முதல் 27, 2025 வரை பல கடலோரப் பகுதிகளில் நடத்தப்பட்ட உயிர்காக்கும் நடவடிக்கைகளின் போது குறித்த 10 சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் ரஷ்யா, யுக்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 14 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 3 உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை, பலபிட்டிய, மிரிஸ்ஸ மற்றும் நிலாவெளி ஆகிய பிரபல்யமான கடற்கரைப் பகுதிகளில் குறித்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரையோர காவற்படை 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இன்றுவரை, இலங்கை கரையோர காவற்படையினர் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த 2,500க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இதில் 1,160 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.