வரலாறு காணாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாவின் பெறுமதி
இந்திய ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதன்படி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி இன்று காலை 92 ஆக காணப்பட்டது.
பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம் மற்றும் டொலர் தேவையில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம்
2026 ஆம் ஆண்டுக்கான முதல் கொள்கை முடிவின் முடிவில் விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, டொலர் குறியீடு அதன் 4-1/2 ஆண்டு குறைந்த அளவிலிருந்து உயர்ந்த பின்னர் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இதுவரை, ரூபாய் மதிப்பு 2% சரிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வரிகளை விதித்ததிலிருந்து இது கிட்டத்தட்ட 5% குறைந்துள்ளது.
இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% வளர்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.