உலகில் தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை ; 5,600 டொலர்களை எட்டியது
உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,600 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்,
மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.