அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச் சூட்டில் பலி
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல் (57) குடும்பத் தகராறின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஜார்ஜியா மாநிலத்தின் காப் கவுண்டியில் உள்ள ஸ்மைர்னா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஷீத்தல், குடும்பத் தகராறின்போது அவரது கணவர் கிர்க் வர்செசியனால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குண்டுக் காயங்களுடன் ஷீத்தலையும் அவரது மகன் ஜேசனையும் மீட்டனர்.
இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஷீத்தல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மகன் ஜேசன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஷீத்தலின் கணவர் கிர்க் வர்செசியன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் ஜேசனின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல், அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் கானா ஆகிய நாடுகளில் வாழ்ந்துள்ளார்.
1994ஆம் ஆண்டு ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற அவர், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்த பின்னர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஷீத்தலின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.