இந்தியா–இலங்கை உறவில் மேலும் ஒரு இணைப்பு ; புதிய பால உதவி வழங்கல்
இருதரப்பு போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 250 மெட்ரிக் தொன்னிற்கும் அதிக எடையைக் கொண்ட 'பெய்லி' (Bailey) தற்காலிகப் பாலங்களின் புதிய தொகுப்பினை இந்தியா இன்று (ஆகஸ்ட் 6) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய் கே, இந்த திட்டப் பொருட்களை இலங்கையின் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் கையளித்தார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மறுசீரமைப்பு உதவிக் கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்திய இராணுவப் பொறியாளர்களால் நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள இந்தப் பாலங்கள், நாட்டின் போக்குவரத்துப் பாதைகளைச் சீரமைப்பதுடன் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக அமையும். இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தனது உத்தியோகபூர்வ இலங்கை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.