கோதுமை மாவின் விலை அதிகரிப்பு ; நாடளாவிய ரீதியில் விற்பனை வீழ்ச்சி
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் அதன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக கோதுமை மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கிலோகிராம் கோதுமை மா 220 ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதே தொகையை விடக் குறைந்த விலையில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசியைக் கொள்வனவு செய்ய முடிவதால், கோதுமை மாவுக்கான நுகர்வோர் கேள்வி குறைந்துள்ளதாகவும் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, பிராந்திய விற்பனை முகவர்கள் ஊடாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் போரினால் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கோதுமைத் தானியங்களைத் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.