வீடுகளில் உள்ள தொற்றாளர்களுக்கு இவை முக்கியம்; விசேட வைத்திய நிபுணர்
நாட்டில் வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புரதச் சத்து நிறைந்த உணவுகள் மூலம் கொரோனா நோயாளர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் என நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இவைதவிர, விட்டமின் C நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளும் அதேநேரம், விட்டமின் D ஐ பெற்றுக்கொள்வதற்காக நாளொன்றில் அரைமணி நேரமாவது சூரிய ஔியில் இருப்பது முக்கியம் எனவும் வைத்திய நிபுணர் மேலும் கூறியுள்ளார்.
தானிய வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதோடு சுடுநீர் அருந்துவது சிறந்தது எனவும் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உணவில் சைவ அல்லது அசைவ உணவுகளைச் சேர்ப்பது முக்கியம் எனவும் இதனால் அவர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வளர்க்கவும் முடியும் எனவும் அவர் கூறினார்.
மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்காக சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு அவர்கள் சுவாசிப்பதில் சிரமம் அல்லது பசியின்மை இருந்தால் பசியை ஊக்குவிக்கும், செரிமானத்தை எளிதாக்கும் மென்மையான உணவுகள் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
கொரோனரி இதய நோயுள்ள நோயாளர்கள் மிகச்சிறிய உணவை உட்கொள்வது அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திரவங்களை அருந்துவது சிறந்தது எனவும் மருத்துவர் ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.