யாழில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
யாழில் இராணுவ படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் Douglas Devananda முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப் பிரதாணி சாகல ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்றது.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் (06-06-2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய குழு ஒன்றினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினரையும் பொலிஸாரையும் உள்ளடக்கிய குறித்த குழு குறுகிய காலப் பகுதிக்குள், அதிகபட்சமாக விடுவிக்கக் கூடிய காணிகளை அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வலிகாமம் - வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசுடமையாக்குவது தொடர்பாக வர்த்தமாணி வெளியிடப்பட்ட சுமார் 6000 ஏக்கர் காணிகளில சுமார் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதால் குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், காணி விடுவிப்பு தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கி, மக்களின் ஒத்துழைப்புடன் காணிகளை விடுவிப்பதற்கு தேவையான காணி அளவீடுகளை மேற்கொள்வதற்கும், இன்னும் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து மீள்குடியேற்றுவதற்கும் இன்றைய தின கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.