ரணிலின் கைது ; கொழும்பில் மக்களை திரட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாளை (26) கொழும்பில் கட்சி சார்பின்றி கூடுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இன்று (25) எதிர்க்கட்சிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் அரசியல் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அகில விராஜ் காரியவசம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்காததன் மூலம் அடிப்படை பிணை நிபந்தனைகளைக் கூட பொலிஸார் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம் அடக்குமுறை செயல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த நிகழ்வில் மேலும் பேசிய இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் நாளை கொழும்பில் கூட வேண்டும் என்று கூறினார்.
கேள்வி - ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்ற வரத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் யாராவது விலகுவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதா? "எங்களுக்கு அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லை.
பயப்பட வேண்டாம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு அப்படி ஒரு ஆசை இருக்காது என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்தக் கேள்வி எழுப்பப்படுவது அரசாங்கம் ரணிலின் பாராளுமன்ற வருகைக்கு அஞ்சுகிறதா என தோன்றுகிறது ?. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு முன்பே எதிர்க்கட்சிகளை ஒற்றுமை படுத்தியதற்கு ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி."