மருத்துவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் ; பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று முக்கிய முடிவு
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் பங்கேற்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்று (27) காலை நடைபெறவுள்ளது.
மருத்துவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்காத நிலையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் அடிப்படை வேதனம் அதிகரிக்கப்பட்டபோதும், மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு 44 பில்லியன் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் வருடாந்தம் 100 பில்லியன் ரூபாய் வரி செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு வழங்காவிட்டால், நவம்பர் 30 அல்லது வேறொரு தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்த இறுதித் தீர்மானம் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.