இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; பேராசிரியர் எச்சரிக்கை
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில்பக்கவாத (Stroke) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறையின் பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேசிய பக்கவாத சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சமூகங்களில் சுமார் 10 பேரில் ஒருவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் பதிவாகும் நோயாளிகளில் சுமார் 75 வீதமானோர் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே (Ischaemic stroke) பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 10 விசேட பக்கவாத சிகிச்சைப் பிரிவுகள் மாத்திரமே காணப்படுவதாகவும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்றும் பிரதான மருத்துவமனைகளிலும் குறைந்தது தலா ஒரு விசேட சிகிச்சைப் பிரிவேனும் நிறுவப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் உதய ரணவக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.