எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (19-07-2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தலைமையில் நடைபெற்றது.
இதன்படி, வரும் 21ம் திகதி முதல் சிபெட்கோ பெற்றோல் நிலையங்களில் வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருளை பெற முடியும்.
மேலும், தற்போது வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற முடியாத பட்சத்தில், அந்தந்த நாளின் எண்ணிற்கு ஏற்ப எரிபொருள் வழங்கி அந்த வாகனங்களை வரிசையில் இருந்து அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1500 ரூபாவும், முச்சக்கரவண்டிக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவும், ஏனைய வாகனங்களுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாவும் எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த நடைமுறைக்கு இணங்காத தரப்பினருக்கு எரிபொருளை வழங்குவதில்லை எனவும், இணங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.