பேருந்து கட்டண மாற்றம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஆண்டுதோறும் ஜூலை முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை மாதாந்த திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் ஏனைய பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தங்களில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கு பேருந்து கட்டணங்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து துறை தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, ஜூன் மாத ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம், சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர் அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.