பொதுமக்கள் சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன்; படையினர் பொலிஸார் குவிப்பு!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்தும் இருந்து வருகிறார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் கடலென திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
படையினர் பொலிஸார் குவிப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மருத்துவர் அருச்சுனாவுக்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் போராட்டம் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் பெருமளவு பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.