26 வயது யுவதிக்கு 46 வயது நபருடன் காதல்; பிரதேச சபை உறுப்பினரின் கணவர் மீது தாக்குதல்
புத்தளம், கல்லடி பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் கணவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், இரண்டு பெண்களையும் ஆண் ஒருவரையும் புத்தளம் தலைமையகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்லடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், அவரது காதலன் என கூறப்படும் 46 வயதுடைய நபரொருவரும் இத்தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி குடியிருந்த குழுவினர்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளைச் சீரமைப்பதற்காக, கல்லடி பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து சரளை கற்களை ஏற்றிச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியிருந்த குழுவினர், சரளை கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இடன்போது பிரதேச சபை உறுப்பினரின் கணவர், அங்கிருந்த பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த ஒருவர் அதனைத் தனது கைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.
அந்த காணொளி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, புத்தளம் தலைமையகக் காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.