ஆட்கடத்தல் சம்பவங்கள்: இலங்கையில் இருந்து ஓமானுக்கு பறந்த விசேட விசாரணை குழு!
ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று ஓமான் சென்றுள்ளது.
இந்த விடயம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓமானுக்கான ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த குழு நேற்று (10-12-2022) புறப்பட்டுச் சென்றுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று விசாரணை அதிகாரிகள் மற்றும் ஒரு காவல்துறை பரிசோதகர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒரு பெண் உப காவல்துறை பரிசோதகர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் தொடர்பில் அண்மைய நாட்களில் பதிவாகிய சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.