நுவரெலியா குடிநீர் தாங்கியில் மனித சடலம்!
நுவரெலியா பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து இன்று மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎளிய,மஹிந்த மாவத்தை,லவர்சிலிப் தோட்டம்,பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரதேசம் ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஆவாஎளிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான “கொள்ளா” என்று அழைக்கப்படும் நமசிவாயம் அமிர்தலிங்கம் (வயது 42) என நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சடலம் நீர் தாங்கியின் இடுக்கில் சிக்கியுள்ள நிலையில் சடலத்தை மீட்கும் பணியை பொலிசார் முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேவேளை சடலம் கிடக்கும் பிரதான தாங்கியிலிருந்து மக்கள் குடிநீர் பாவனைக்காக வெளியேரும் தண்ணீரை உடனடியாக தடைசெய்துள்ள பொலிசார், அது தொடர்பில் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
