வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெரும் வேறுபாடு ; தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களில் அதிகமானோர் தென் மற்றும் மேல் மாகாணங்களில் இருந்தே தெரிவு செய்யப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளிக்கையிலேயே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் வட மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவானோரே இந்நாடுகளுக்கு செல்வதும் தெரிய வந்துள்ளது.
2015 – 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் 197,022 இலங்கையர்கள் இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளனர்.

குறித்த மூன்று நாடுகளுக்குமான வேலைவாய்ப்புகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் (2015-2025) கம்பஹா, காலி, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 98,906 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மொத்தப் பதிவுகள் இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான மொத்தப் பதிவுகளில் 55.2 வீதம் ஆகும்.
(கம்பஹா: 32,841 பதிவுகள், காலி: 22,234 பதிவுகள், கண்டி: 21,114 பதிவுகள், கொழும்பு: 17,907 பதிவுகள், இரத்தினபுரி: 10,715 பதிவுகள்) குறைந்த பதிவுகளைக் கொண்ட மாவட்டங்களாக மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகியவை காணப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் (2015-2025) இந்த மாவட்டங்களில் இருந்து மொத்தம் 10,653 பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது அதிகப் பதிவுகளைக் கொண்ட மாவட்டங்களின் மொத்த பதிவுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதத்தையே குறிக்கிறது.
(மன்னார்: 25 பதிவுகள், யாழ்ப்பாணம்: 1,510 பதிவுகள், மட்டக்களப்பு: 3,116 பதிவுகள், முல்லைத்தீவு: 346 பதிவுகள், வவுனியா: 5,656 பதிவுகள்) இதனடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில், அதிகப் பதிவுகளைக் கொண்ட மாவட்டங்களுக்கும் குறைந்த பதிவுகளைக் கொண்ட மாவட்டங்களுக்கும் இடையிலான பதிவு சதவீத வேறுபாடு மிக அதிகமாக காணப்படுகின்றது.
அதிக பதிவுகளைக் கொண்ட மாவட்டங்கள் மொத்தப் பதிவுகளில் 55.2 வீதம் பங்களித்துள்ளன. குறைந்த பதிவுகளைக் கொண்ட மாவட்டங்கள் மொத்தப் பதிவுகளில் 5.95 வீதம் மட்டுமே பங்களித்துள்ளன.
இந்த வேறுபாடு, இலங்கை முழுவதும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவுகளில் பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதைக் காட்டுகிறது.