வவுனியாவில் தீ விபத்தில் வீடொன்று முற்றாக சேதம்! பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று (19) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேப்பங்குளம் காளிகோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள வீட்டில் திடீரென தீப்பற்றியதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசம்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அயலவர்களும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஒத்துழைத்துள்ளனர்.
எனினும், தீ விபத்தின் காரணமாக வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.