மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய முடிவின் மூலம் அது 365 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

சட்டப்பேரவையில் மனிதவள முகாமைத்துவ துறை தொடர்பான மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் டி. சரத்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தற்போது தமிழ்நாட்டில் அரச பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய தீர்மானத்தின் கீழ் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுமுறை கிடைக்கப்பெறும். சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டை முன்னிறுத்தி தமிழக அரசு செயற்படுத்தி வரும் கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.