இலங்கையில் பிறந்த பெண்ணின் வரலாற்றுத் திருப்பம் ; சுவிட்சர்லாந்தில் உயரிய பதவி
சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் ஃபரா ரூமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இம்மாதம் ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுகாதாரத் துறை சார்ந்த குழுக்களில் தீவிரமாகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஃபரா ரூமி (Farah Rumy), சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவர் எனப்படுவது சுவிட்சர்லாந்தில் உயரிய பதவியாகும்.

இவர் 1991 டிசம்பர் 28 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார். தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தார்.
2021 ஆம் ஆண்டு சோலோத்தர்ன் (Solothurn) மாகாண சபைக்கு முதல் முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது நாடாளுமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராக மிக உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஃபரா ரூமி எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வழி இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில், புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட ஒரு பெண் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய உச்சத்தை அடைந்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.