இலங்கையின் கடன் மீள செலுத்தலை நிறுத்துமாறு120 உலகப் பொருளாதார நிபுணர்கள் கூட்டாக கோரிக்கை!
இலங்கையை நிலைகுலையச் செய்த 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளைச் சமாளிக்க, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தலை உடனடியாக நிறுத்திவைக்குமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), பிரபல பொருளாதார நிபுணர்களான தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty), ஜெயதி கோஷ் மற்றும் 'டொனட் எகனமிக்ஸ்' புகழ் கேட் ராவொர்த் உள்ளிட்ட 120 சர்வதேச வல்லுநர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தரைமட்டமாகியுள்ளன.
இது இலங்கையின் வரலாற்றில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான இயற்கை அனர்த்தம் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்து, கடந்த ஆண்டு 9 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போதைய சூழலில் அரசாங்க வருமானத்தில் 25% கடனுக்காகச் செலவிடுவது சாத்தியமற்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"இலங்கை தற்போது கடுமையான பொருளாதார அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நிலையில் உள்ள நாட்டின் நிதி இடைவெளியை இந்தச் சூறாவளிப் பேரழிவு முற்றாக விழுங்கிவிடும்.
எனவே, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய கடன் மறுசீரமைப்புத் திட்டம் அவசியமானது," என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் 200 மில்லியன் டொலர் அவசரக் கடனை கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.