ஹிஷாலினி விவகாரம்: பிள்ளைகளை கவனித்துக் கொள்ள இருவர் உள்ளனர்; ரிஷாத்தின் மனைவிக்கு பிணை மறுப்பு
ரிஷாத்தின் இல்லத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உயிரிழந்த விவகாரத்தில், மனைவி உள்ளிட்டோருக்கு பிணை வழங்க நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நகர்த்தல் பத்திரம் ஊடாக சந்தேக நபர்கள் இருவர் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளையே நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா, ரிஷாத்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய நால்வர் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 5 ஆவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தண்டனை சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின் 308,358,360 ஆவது அத்தியாய்ங்களின் கீழ் 18 வயதின் கீழான ஒருவரை அடிமைத் தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை, துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா, ரிஷாத்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத், ரிஷாத் பதியுதீன் ஆகிய ஐவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலசூரிய, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் இனோகா, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார, ஆகியோரின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் குறித்த மனு நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது 2 ஆம் , 3 ஆம் சந்தேக நபர்கள் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டன. இதன்போது 2 ஆம் சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டும், 3 ஆம் சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் பிணைக் கோரி விடயங்களை மன்றுக்கு முன்வைத்தனர்.
அத்துடன் 2 ஆவது சந்தேக நபர் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆவது தடுப்பூசியை அவர் இன்னும் பெற்றுக்கொள்ளாத நிலையில், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2 ஆம் சந்தேக நபரின் மனைவியான ரிஷாத் பதியுதீனின் மாமியார், இதுவரை ரிஷாத் பதியுதீனின் பிள்ளைகளை கவனித்து வந்ததாகவும், எனினும் நேற்று காலை அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசி.ஆர். பரிசோதனையில் அவரும் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியமை உறுதியானதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறான நிலையில், ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி இருவரும் விளக்கமறியலில் உள்ள நிலையில் அவர்களது பிள்ளைகளை கவனித்துக்கொள்ள எவரும் இல்லாமல் போயுள்ளதாகவும், அந்த வகையில் மனிதாபிமான ரீதியில் அந்நிலைமையை ஆராய்ந்து, 3 ஆவது சந்தேக நபரான ரிஷாத்தின் மனைவிக்கு பிணையளிக்குமாறு சட்டட்தரணிகள் கோரியிருந்தனர். அதே நேரம் கொவிட் -19 நிலைமையை அடிப்படையாக கொண்டு 2 ஆம் சந்தேக நபருக்கும் பிணை கோரினர்.
இதன்போது, நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இவ்வாறான நிலையில் 3 ஆம் சந்தேக நபருக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க தான் எதிர்ப்பு வெளியிடவில்லை என பதிவு செய்தார். எனினும் விசாரணையாளர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் இனோகா, ரிஷாத்தின் வீட்டில் அவரது மாமியாருக்கு மேலதிகமாக, இவ்வழக்கின் 4 ஆவது சந்தேக நபரின் மனைவியும் தங்கியுள்ளதாகவும் அவரால் ரிஷாத்தின் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அதோடு தான் 4 ஆவது சந்தேக நபரின் தொலைபேசியை பெற்றுக்கொள்ள சென்றபோது அவர் அங்கிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கை செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தவிட்டார்.