2.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பலாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் ஓரளவுக்கு கொந்தளிப்பாக இருக்கக்கூடும். மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அவதானிப்பு நிலையம் மேலும் எச்சரித்துள்ளது.
எனவே, இக்கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் கடற்படையினரும், மீன்பிடி சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.