பல மாவட்டங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை
வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதிகள் ஊடாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக திசைமாறி, மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்கு திசையில் நகர்ந்து இத்தொகுதி எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையவுள்ளது.
இதன்படி, நாளை (26) காலையளவில் சூறாவளியாகவும், நாளை மறுதினம் (27) காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய கடற்பகுதியில் பலத்த புயலாகவும் இது வலுவடைவதற்குக் மிக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
வடக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.