கொழும்பை மூழ்கடித்த கனமழை ; பிரதான வீதிகளில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல்
இடைக்காலப் பருவக்காற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இன்று (06) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கொழும்பில் அதிகபட்சமாக 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதன்படி, கொழும்பில் அதிகபட்சமாக 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மத்துகமவில் 95 மில்லிமீற்றரும், பதுரலியவில் 84 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

திடீரெனப் பெய்த கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டி முதல் காலி வீதி வரையான பகுதிகள், பொரளை, மருதானை மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதிகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேலும், அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுப் பகுதிகளுக்கு அருகிலும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாவலப்பிட்டி நகரின் பேருந்து நிலையம் மற்றும் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியிலும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை
மறுபுறம், கொழும்பில் பெய்த கனமழையினால் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பிற்பகல் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் பெரும் தாமதத்தை எதிர்கொண்டுள்ளன.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பல்வேறு பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு, சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், வெள்ளம் சூழ்ந்த வீதிகளைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, தொடர்ந்தும் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.