கம்பஹாவுக்கு புதிய பிரதம நீதவான் நியமனம்
நீதிவான் பண்டார குணரத்ன, உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட இலையில், கம்பஹா புதிய பிரதம நீதிவானாக (Chief Magistrate) கோசல சேனாதிபதி, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் (JSC) நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கோசல சேனாதிபதி எதிர்வரும் 09ஆம் திகதி திங்கட்கிழமை கம்பஹா புதிய பிரதம நீதிவானாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போது கடமையாற்றும் நீதிவான் பண்டார குணரத்ன, உடனடி அமலுக்கு வரும் வகையில் நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலமும், நீதித்துறையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதன் மூலமும் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரிடம் நீதிவான் பண்டார குணரத்ன விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே இந்த அதிரடி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.