தமிழர் பகுதியை தாக்கிய கடும் மழை, சூறாவளி காற்று ; பொதுமக்கள் அவதி
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால கோடை வெப்பநிலைக்குப் பின்னர் திடீரென கனமழை பெய்துள்ளதுடன், பல பகுதிகளில் சுழற்காற்று, மின்னல் தாக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற காலநிலை மாற்றங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (11) மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பலத்த காற்று காரணமாக சிறியளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் மல்வத்தை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளிலும், சில தாழ்நில வீட்டுத்திட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்னல் தாக்கம் தொடர்பிலும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் மழையால் அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளதுடன், பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடரும் பட்சத்தில் மேலும் பல வீடுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மறுபுறம், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது.
நாளை (12) காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், கடல்சார் ஊழியர்கள் மற்றும் கடற்படைப் பணியாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்காலிகமாக கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.


