யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது பிரதிவாதி தரப்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதன் காரணமாக இந்த வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் கொள்வனவு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.