கையளித்த சடலத்தை மீளப்பெற்ற சுகாதார அதிகாரிகள்; பகீர் கிளப்பிய தகவல்!
உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட சடலத்தை கொரோனா என கூறி சுகாதார அதிகாரிகள் திரும்பபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
புத்தல - ஒக்கம்பிட்டிய மினிபுரகம பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் உடல் மலர் சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு , பின்னர் அங்கிருந்து வீட்டுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல் கையளிக்கப்பட்டு பல மணி நேரங்களின் பின்னரே, குறித்த பெண் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு , சுகாதார அதிகாரிகள் பெண்ணின் வீட்டுக்குச் சென்று குறித்த உடலைத் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய அடக்கம் செய்ய கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த மரண வீட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 200 க்கும் அதிகமானோர் மரண நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் , வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்த அதேவேளை, சுகாதார அதிகாரிகளின் இந்த நடவடிகையால் பிரதேசவாசிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.