இந்த உடல் பிரச்சினைகள் இருக்கா? அப்போ கொத்தமல்லியை அதிகம் சாப்பிடாதீர்கள்
அன்றாட சமையலில் சுவைக்காகவும் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுவதாகக் கூறப்படுகின்றது.
எனினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிக அளவில் உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல்நலப் பிரச்சினைகள்
சிறுநீரக நோயாளிகள்: சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அதிகரிக்கும் பொட்டாசியத்தை வெளியேற்றுவது சிரமமாக இருக்கலாம். கொத்தமல்லியில் பொட்டாசியம் உள்ளதால், அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்: கொத்தமல்லி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக அளவில் அல்லது சாறு வடிவில் எடுத்துக்கொண்டால் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் கொத்தமல்லியை உட்கொள்ளும்போது இரத்தச் சர்க்கரை அளவு மேலும் குறையக்கூடும். எனவே, அளவோடு பயன்படுத்துவது அவசியம்.
கல்லீரல் நோயாளிகள்: கடுமையான கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்: சிலருக்கு கொத்தமல்லி ஒவ்வாமையை ஏற்படுத்தி தோலில் சிவத்தல், தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அரிதாக, சிலருக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
மேற்கண்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பச்சைக் கொத்தமல்லி சட்னி அல்லது சாறு போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்த்து, உணவில் குறைந்த அளவில் பயன்படுத்துவது குறித்து வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானதாகும்.