யாழ் வெதுப்பகத்துக்கு 70 ஆயிரம் ரூபா தண்டம்!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் மற்றும் உணவகத்திற்கு 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைக்கே தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை,
நீதவான் நீதிமன்றில் வழக்கு
வெதுப்பகச் சுற்றாடலில் இளையான்கள் பெருக இடமளித்தமை, அழுகிய உருளைக்கிழங்குகளை உணவு தயாரிப்புக்கு களஞ்சியப்படுத்தியமை,
வெதுப்பகப் பொருட்களுடன் தொற்று ஏற்படும் வண்ணம் இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்றைய தினம் (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை வெதுப்பக உரிமையாளர் ஏற்றுக்கொண்டதையடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், அவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது.
மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்யத் தவறியமை,
சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருட்களை தொற்று ஏற்படும் வண்ணம் களஞ்சியப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
மேற்கூறப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தது.