ஆரோக்கியம் முதல் அழகு வரை; டிராகன் பழத்தின் நன்மைகள்!
தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ நன்மைகளையும் வழங்குகின்றது.
கள்ளிச்செடி குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன அதிகளவில் நிறைந்துள்ளன.

ஆரோக்கிய நன்மைகள்
டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபிளவனாய்டுகள் அதிகளவில் காணப்படுவதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
பருவகாலத் தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு, வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வழிவகுக்கிறது.

இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.
இதன் கருப்பு நிற விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.

டிராகன் பழத்தில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கிறது.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமச் செல்களைப் புதுப்பித்து, வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையுடன் தோற்றபொலிவை பேணவும் டிராகன் பழம் உதவுகின்றது.