கீரிமலையில் கொட்டப்பட்ட வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் ; பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டு
பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை குறித்த பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றியும், உரிய அனுமதிகள் இன்றியும் சுமார் 300 டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வலி. வடக்கு பிரதேச சபை பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
கீரிமலையில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியே உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று கீரிமலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கீரிமலை பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பொதி செய்யப்பட்ட நிலையில் பெருமளவிலான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக கீரிமலை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி ஆணையாளரும் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீறி ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.