ரயில் நிலைய அதிபர்களின் 48 மணி நேர போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததைப் போன்று பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அல்லது சதி நோக்கத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது தமது சங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இந்த அடையாள வேலைநிறுத்தத்தின் பிரதான நோக்கம் எனவும் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேலைநிறுத்தம் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.