பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி முழக்கம் ; பொலிஸாரின் விசாரணையில் வெளியான பல தகவல்கள்
கொழும்பு வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் நேற்று (23) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருந்த ஒருவரை இலக்காகக் கொண்டு, உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தாக்குதலை நடத்திய சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.