யாழ். செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை (Raincoat) ஒத்த ஆடையுடன் காணப்பட்ட சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதன் அடிப்படையில், அகழ்வுப் பணிகளின் 41ஆவது நாளான நேற்று (23) மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள், சில ஆணிகள் மற்றும் சிமெந்து துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது மொத்தம் 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், 467ஆவது எலும்புக்கூடு இதுவரை கண்டறியப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவரின் கூற்றுப்படி, குறித்த எலும்புக்கூடு சவப்பெட்டியின் அடையாளங்களுடன் காணப்படுவதோடு, மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் மழை அங்கியை ஒத்த ஆடையும், கால்பகுதியில் காலுறைகளும் (Socks) இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த உடல் சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான விரிவான தகவல்களை இன்று (24) நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் தெளிவாக வெளியிட முடியும் என்றும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் குறிப்பிட்டார்.