அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியாது ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
தனிநபர் வருமான வரியின் அதிகபட்ச 36 சதவீத வரி வீதத்திற்கான மாதாந்த வருமான எல்லையை 2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 5 இலட்சம் ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது 358,333 ரூபாவாகக் காணப்படும் அதிகபட்ச வரி வீதத்திற்கான மாதாந்த வருமான எல்லை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 433,333 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது 150,000 ரூபாவாகக் காணப்படும் மாதாந்த வருமான வரி விலக்கு எல்லையை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் இயன்றளவு நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைத்து இலங்கையர்களினதும் பொதுவான இலக்காக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.